மாதரே ...
உலக மகளிர் தினத்தை முன்னிட்டு பேராதனைப்பல்கலைக்கழக 2020ஆம் ஆண்டிற்கான செயற்குழு "மாதரே.." என்ற நிகழ்வினை நடாத்துவதற்கு தீர்மானித்து, 12.03.2020 திகதியன்று மாலை 5 மணியளவில் பேராதனைப் பல்கலைக்கழக, பல் மருத்துவபீட, பம்பரதெனிய மண்டபத்தில் அதனை நிகழ்த்தியது.
மகளிர் தினத்திற்கு சார்பாக மகளிரை மையப்படுத்திய இணைய வழி கவிதைப்போட்டி முன்கூட்டியே நடத்தப்பட்டதோடு, அன்றைய தினத்தில் நாடக அரங்கேற்றம் உள்ளிட்ட நிகழ்வுகளுடன் "பெண் உணர்வுகளை வெளிப்படுத்தும் தமிழ் திரையிசை கானங்கள்" என்ற இசைக்கச்சேரியும் நடைபெற்றது..
நிகழ்வின் இறுதியில் கவிதைப்போட்டிக்கான வெற்றியாளர்களுக்கு சான்றிதழ்களும் பரிசில்களும் வழங்கப்பட்டன. இந்நிகழ்விற்கு பேராதனைப் பல்கலைக்கழக விரிவுரையாளர்களும் மாணவர்களும் பெருந்திரளாக வருகைத் தந்து சிறப்பித்தனர்.
தமிழ்ப்பணி தாண்டிய சமூகப்பணி!!!
#உதவிக்கரம் நீட்டுவோம் நம்_உறவுகளுக்காய்....
2019ம் ஆண்டின் இறுதிப்பகுதியில் சீனாவின் வூஹான் நகரில் தோன்றியதாக கருதப்படும் கொரோனா எனப்படும் கொவிட் 19 தொற்றானது உலக நாடுகளில் வெகு வேகமாக பரவலடைந்து, எமது நாட்டிலும் 2020 மார்ச் நடுப்பகுதியில் பரவலடையத் தொடங்கியது.
பல்கலைக்கழகங்கள் உள்ளிட்ட அனைத்து சமூக நிறுவனங்களும் அரசினால் தற்காலிகமாக மூடப்பட்டன. நாடு தழுவிய ஊரடங்கினால் அன்றாடம் உழைத்துண்ணும் மக்கள் வெகுவாக பாதிக்கப்பட்டனர். இம் மக்களுக்கு ஏதேனும் வகையில் உதவ வேண்டும் என்ற நோக்குடன் பேராதனைப் பல்கலைக்கழகத் தமிழ்ச்சங்கம் உதவும் கரங்கள் என்ற நிவாரணப்பணியினை முன்னெடுத்தது. இணைய வழியில் உதவிகளை திரட்டி பாதிப்புற்ற எம்மக்களுக்கு அவற்றை கொண்டு சேர்த்தது.
முதற்கட்டமாக பலாங்கொடை என்ற பிரதேசத்தில் வேவத்தை என்ற கிராமத்தில் உள்ள, சமுர்த்தி நிவாரணம் கிடைக்கப்பெறாத குடும்பங்களுக்கு நிவாரண உதவிகளை தமிழ்ச்சங்கம் வழங்கியது.
அதன் பின்னர் பிரித்தானிய சைவத்திருக்கோயில் ஒன்றியத்துடன் கைகோர்த்து நுவரெலியா,ஹட்டன், கண்டிப் பிரதேசங்களிலும் நிவாரண உதவிச் செயற்பாடுகளை முன்னெடுத்தது தமிழ்ச்சங்கம்.
கலையையும் தமிழையும் பல்கலைக்கழக மட்டத்தில் வளர்க்க முனையும் பேராதனைப் பல்கலைக்கழகத் தமிழ்ச்சங்கம், சமூகம் இடர்ப்பட்ட நேரத்தில் களப்பணியில் இறங்கியமை மூலம் புதுவித அனுபவங்களைப் பெற்றுக்கொண்டது. இனி வரும் காலங்களிலும் இதுபோன்ற செயற்பாடுகள் தொடரும்..
மீம்ஸ் போட்டித் தொடர்.
விழித்துக் கொள்வோம்... விழிப்புணர்வூட்டுவோம்...
#மீம்ஸ் போட்டித்தொடர் 2020.
கொவிட் 19 தொற்று காரணமாக அமுல்படுத்தப்பட்ட நாடுதழுவிய ஊரடங்கினால் சகல செயற்பாடுகளும் இணையவழியில் நடாத்தப்படத்தொடங்கின.
பல்வோறு சங்கங்களும், அமைப்புக்களும் பலவிதமான போட்டித்தொடர்களையும் விழிப்புணர்வுகளையும் முகநூல், வலையொளி (youtube) போன்றவற்றின் ஊடாக கொண்டு நடத்தத் தொடங்கிய காலவெளியில் தமிழ்ச்சங்கம் சற்று வித்தியாசமான ஒரு போட்டித்தொடரை முகநூல் வாயிலாக அறிமுகப்படுத்தியது.
புகைப்பட இணைப்புக்களைக் கொண்டு செய்திகளை கடத்தும் மீம்ஸ் எனப்படும் சிற்றூடகத்தில் விழிப்புணர்வூட்டும் நோக்கத்துடன் ஒரு போட்டித்தொடரை அகில இலங்கை ரீதியில் செயற்படுத்தியது.
சுமார் 300இற்கும் மேற்பட்ட மீம்கள் இப்போட்டிக்காக வந்துசேர, அவற்றில் சிறந்தவற்றை தெரிவு செய்து விழிப்புணர்வு நோக்கில் முகநூல் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு கொவிட் தொற்றிலிருந்து மக்கள் பாதுகாப்பாக இருக்க, புதுவித விழிப்புணர்வூட்டலை தமிழ்ச்சங்கம் முன்னெடுத்தது.
உத்தியோகபூர்வ வலையொளி (YouTube) உருவாக்கம்.
தமிழ்ச்சங்கத்திற்கான உத்தியோகபூர்வ யூடியுப் அலைவரிசை உருவாக்கமும், உயர்தர கற்றல் வழிகாட்டல் காணொளிப் பதிவுகளும்...
2020.04.07 அன்று தமிழ்ச்சங்கத்திற்கான உத்தியோகபூர்வ யூடியுப் அலைவரிசையொன்று ஆரம்பிக்கப்பட்டது. காலங்காலமாக தமிழையும், தமிழரின் ஆளுமைத்திறன்களையும் போஷித்த பேராதனைப் பல்கலைக்கழகத் தமிழ்ச்சங்கம் தொழில்நுட்ப உலகிலும் 'தேமதுரத் தமிழோசை முழங்க வேண்டும்' என்பதை நோக்காகக் கொண்டு இச்செயற்பாட்டை மேற்கொண்டது.
செயலாலர் கு. கஜானந்த், இதழாசிரியர் த. ஜெப்ரி என்போரின் பிரதான ஆலோசனை மற்றும் வழிகாட்டலுடன் நிர்வாகக் குழு உறுப்பினர் ர. விதுசன் தலைமையில் யூடியுப் அலைவரிசைக்குழு தம் செயல்களை செவ்வனே தொடங்கியது.
தமிழ்ச்சங்க நிகழ்வுகளை பதிவு செய்தல், ஒளிபரப்புதல் உள்ளிட்ட ஊடக செயற்பாடுகளை முன்னெடுப்பதினை பிரதான செயலாகக் கொண்டு இயங்கத் திட்டமிடப்பட்ட குறித்த அலைவரிசையின்,முதல் செயற்திட்டமாக அமைந்தது, க. பொ. த உயர்தரத்திற்குத் தெரிவான மாணவர்களுக்கான துறைத்தெரிவினை அறிமுகப்படுத்தியதே ஆகும்.
யூடியுப் அலைவரிசை என்பது வருமானம் ஈட்டக்கூடிய ஒரு சிறந்த வழியாகும். பார்வைகளின்(Views) எண்ணிக்கைக்கமைய வருமானமும் கிடைக்கும் படியாக எமது சங்க அலைவரிசையும் அமைக்கப்பட்டுள்ளது. தொடங்கி வெகு சில நாட்களிலேயே மூவாயிரத்திற்கும் அதிகமான தொடர்வோரை (Subscribers) பெற்றுள்ள இவ்வலைவரிசையை தொடர்ந்து வரும் செயற்குழுக்கள் திறம்பட நடாத்தி, அதன் மூலம் பெறும் வருவாயினை தமிழ்ச்சங்க நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்துதல் சிறப்பு தரும்.
நாவண்மை
இளம் விவாதிகளுக்கான நிகழ்நிலை விவாதச்சமர்...
இலங்கையில் கொரொனா இரண்டாவது அலை வீசிக்கொண்டிருந்த காலத்தில் பேராதனைப் பல்கலைக்கழக மாணவர்களின் பேச்சாற்றலை கண்டறியும் நோக்குடனும் இளம் பேச்சாளர்களுக்கு களம் அமைக்கும் நோக்குடனும் பேராதனைப் பல்கலைக்கழகத் தமிழ்ச்சங்கத்தினால் நாவண்மை விவாதப் போட்டி நிகழ்நிலையில் நடாத்தப்பட்டது. இப்போட்டியில் அனைத்து பீடங்களை சேர்ந்த மாணவர்களும் பங்குபற்றியதோடு நடுவர்களாக இலங்கையின் சிறந்த விவாதிகள் பங்குபற்றியமையும் குறிப்பிடத்தக்கது. இப்போட்டி தலைவர் சாரங்கன் மற்றும் உப செயலாளர் திவாகரன் வழிகாட்டலின் கீழ் நடாத்தப்பட்டது.
நாதசங்கமம்..
இது சப்தங்களின் பரிணாமம்..
தமிழ்ச்சங்கத்தை நாடுகடந்து நாதங்களைத் தேடவைத்த இன்னிசைப் போட்டித்தொடர்...
ஊரடங்கினால் உலகமே முடங்கிய நேரத்தில் பாதிப்புற்ற மக்களின் மனநிலையை சீர்செய்யும் எண்ணத்துடனும், இசையார்வம் மிக்கவர்களை கண்டெடுத்து தக்க அங்கீகாரம் கொடுக்கவும் தமிழ்ச்சங்கம் உருவாக்கிய மாபெரும் நிகழ்நிலை இசைச்சமரே நாத சங்கமமாகும்.
சங்கத்தின் இதழாசிரியர் சௌமிகா ரகுநாதனின் ஆலோசனை மற்றும் வழிகாட்டலுடன், இப்போட்டிக்கான காணொளிகளை சமூகத்திடம் பெற்றுக்கொள்ள, ஏற்பாட்டுக்குழு முகநூல் வழியாக செயற்படலாயிற்று.
முந்நூறிற்கும் அதிகமான போட்டியாளர்கள் பங்கு கொண்ட இந்தப் போட்டித்தொடரின் நடுவராக சென்னை, பிரிட்ஜ் அகடமி மற்றும் நுண்கலைக் கல்லூரியின் இசைத்துறைத்தலைவர், கலாநிதி. திருவையாறு N. சாரதா அவர்கள் எம் வேண்டுகோளை ஏற்று இணைந்து கொண்டமை போட்டித்தொடரின் சிறப்பினை மென்மேலும் அதிகப்படுத்தியது.
இந்தியா, ஐக்கிய இராச்சியம் உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் இருந்து போட்டியாளர்களும், உள்ளூர் தொலைக்காட்சி மெய்மை இசை போட்டிகளில் (Reality Shows) சமகாலத்தில் கலந்து கொண்ட பிரபலங்களும், ஏனைய போட்டியாளர்களும் முதலாம் சுற்றில் மோதிக் கொள்ள, அதில் தெரிவானவர்கள் ZOOM செயலி மூலம் இரண்டாம் சுற்றில் தம் திறமைகளை நேரடியாக வெளிக்காட்டினர்.
இறுதிச்சுற்றின் போட்டிகள் தமிழ்ச்சங்க உத்தியோகபூர்வ யூடியுப் அலைவரிசையில் இடம்பெற்றது. இசை, வாத்தியம் என்ற பிரதான பிரிவுகளிலும், கர்நாடக இசை திரையிசை என்ற உப பிரிவுகளிலும் சகல வயதினருக்கும் ஏற்புடையதாக இப்போட்டி நிகழ்சி ஏற்பாடு செய்யப்பட்டு இனிதே நிறைவுற்றது..
வெற்றி பெற்றவர்களுக்காக ஒழுங்கமைக்கப்பட்டிருந்த மாபெரும் பரிசளிப்பு விழாவும், இசைக்கச்சேரியும் நாட்டில் தொடர்ந்து நிலவிய கொவிட் தொற்று காரணமாக கைவிடப்பட்டு, பரிசில்களும் சான்றிதழ்களும் தபாலில் அனுப்பி வைக்கப்பட்டமை வருத்ததிற்குரியது..
இனிவரும் காலங்களிலும் இப் போட்டித் தொடர் இடம் பெறல் அவசியமானதாகும்.
எழுத்தாயுதம்.
காலத்தேவையுணர்ந்து கல்விக்கு உதவிக்கரம் நீட்டிய இளையோரின் முயற்சி இது....
தமிழ்ச்சங்கத்தின் வருடாந்த நிகழ்வுகளில் க. பொ. த உயர்தர மற்றும் சாதாரண தர மாணவர்களுக்கான உதவிக்கருத்தரங்குகள் முக்கிய இடம் வகித்திருக்கின்றன.
2020ம் ஆண்டின் தொடக்கத்தில் முடிவு செய்யப்பட்ட வருடாந்த திட்டத்திலும் இச்செயற்பாடுகள் உள்ளடக்கப்பட்டன. என்றாலும் கொவிட் 19 தொற்றானது இவை அனைத்தையும் புரட்டி போட, வளவாளர்களைக்கொண்டு வினாப்பத்திரங்களைத் தயாரித்து முகநூல் வழியாக விநியோகிக்க தக்க நடவடிக்கைகளை மேற்கொண்டது தமிழ்ச்சங்கம்.
எழுத்தாயுதம் 1.0
தலைவர் வி.சாரங்கன், உப செயலாளர் திவாகரன் ஆகியோரின் வழிகாட்டலில் க. பொ. த உயர்தர மாணவர்களுக்கான வினாப்பத்திரங்கள் தயாராகி, சங்கத்தின் உறுப்பினர்கள் மற்றும் நலன் விரும்பிகளால் நாட்டின் சகல பாகங்களுக்கும் நிகழ்நிலையில் பகிரப்பட்டன.
எழுத்தாயுதம் 2.0
க.பொ.த சாதாரண தர மாணவர்களுக்கான வினாப்பத்திரங்களும் காலத்தேவையுணர்ந்து தயாரிக்கப்பட்டு எழுத்தாயுதம் 2.0 என்ற பெயரில் சிறப்பாக கொண்டு நடாத்தப்பட்டது.
இவ்வாறு எம்மால் தயாரிக்கப்பட்ட வினாப்பத்திரங்கள் எமது முகநூல் பக்கத்திலும், www.noolagam.com என்ற இணையதளத்திலும் இன்றைக்கும் பெற்றுக் கொள்ளக் கூடிய வகையில் அமைந்துள்ளன..