தமிழ்ச்சங்க புத்தாண்டு - 2021

யாமறிந்த  மொழிகளிலே, செம்மொழியான தமிழ் மொழிக்கு நிகரான எம்மொழியும் இவ்வுலகில் வேறேதும் உண்டோ.


அகில உலக வாழ் தமிழ் சிங்கள உறவுகளின் மாபெரும் பண்டிகையான சித்திரை புத்தாண்டை முன்னிட்டு பேராதனைப் பல்கலைக்கழக தமிழ்சங்கத்தினால் "தமிழ்சங்க புத்தாண்டு" எனும் தொனியில் 14.04.2021  அன்று மாலை 5.30  மணியளவில் பேராதனைப் பல்கலைக்கழகத் தமிழ்ச்சங்க உத்தியோகபூர்வ முகநூல் பக்கத்தில் நேரலையாக குறித்த நிகழ்வு நடைபெற்றது.


95  வருட பழமையான வரலாற்றினை தன்னகத்தே கொண்ட எம் தமிழ்ச் சங்கமானது  கடந்த காலங்களில் பல சவால்களுக்கு மத்தியிலும் வீரு நடைப்போட்டு தமிழனின் குருதியில் கலந்து வீரத்தை தரணி முழுக்க பரப்புவதற்கு மேற்கொண்ட அபரிதமான முயற்சிகள் என்றுமே போற்றுதற்குரிய சுவடுகளாக இருந்துள்ளதுடன், இன்று முழு உலகமுமே  எதிர்கொண்டுள்ள அசாதாரண சூழ்நிலையின் காரணமாக, மக்களின் இயல்பு  வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ள இந்த சந்தர்ப்பத்தில் பண்டிகைகளும், ஒன்றுகூடல்களும் மட்டுப்படுத்தப்பட்டது வருத்தத்தை தரும் ஒன்றாக இருப்பினும், மாணவர்கள் நினைத்தால் எதையும் சாதிக்க  முடியும், என்பதை  இந்த தமிழ்ச்சங்க புத்தாண்டு நிகழ்வும்  எடுத்துக்காட்டியது என்பது எவராலும் மறுக்க முடியாது. 


மேலும் நாடளாவிய ரீதியில் பல்கலைக்கழகங்கள் அரசின் அறிவுறுத்தலுக்கு அமைவாக தற்காலிகமாக மூடப்பட்டுள்ள இந்நிலையில்  எம் பேராதனைப் பல்கலைக்கழகத்தின் ஒன்பது பீடங்களை சேர்ந்த மாணவர்கள்  இம்மியும் பின்னோக்காது தங்களால் இயன்ற அனைத்து ஒத்துழைப்புகளையும் இந்த நிகழ்விற்கு வழங்கியிருந்தனர். 


இந்நிகழ்வினை நிகழ்நிலையில் நேரலையாக கண்டுகளித்து "தமிழ்ச்சங்க புத்தாண்டு" எனும் நிகழ்வினை ஒரு வெற்றிகரமாக மாற்றிய பேராதனைப் பல்கலைக்கழக  விரிவுரையாளர்கள், அனைத்து பீடத்தினை சேர்ந்த மாணவர்கள் மற்றும் தொழில்நுட்ப உதவிகளை வழங்கிய அனைத்து தரப்பினருக்கும் எம் இதயபூர்வமான நன்றிகளை கூறிக்கொள்வதோடு, மலர்ந்திருக்கும் சித்திரை புத்தாண்டு அனைவருக்கும் இறையருள் நிறைவாக கிட்டி அறிவு செழிக்கும்  புத்தாண்டாக மலர நெஞ்சார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

நன்றி.

மகாவலிக் கரையில்...

மே தின சிறப்பு கருத்துவட்டம்

தொழிலாளர் சார் நலன்களும் இலங்கை தொழிலாளர்கள் எதிர்நோக்கும் சவால்களும் என்ற தலைப்பில் 01/05/2021 அன்று பேராதனைத் தமிழ்ச் சங்கத்தினால் நிகழ்நிலை மூலமாக “மகாவலிக் கரையில்...” என்ற கருத்துவட்டம் ஏற்பாடு செய்யப்பட்டு குறித்த தினத்தில் மிகச் சிறப்பான முறையில் இடம்பெற்றது.

இந் நிகழ்வின் சிறப்பு அழைப்பாளராக பேராதனைப் பல்கலைக்கழகத்தின் அரசறிவியல் துறையின் சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி.எஸ்.பாஸ்கரன் கலந்துகொண்டிருந்தார். மேலும் இக் கருத்து வட்டத்தில் அதிகளவான  பார்வையாளர்கள் கலந்து கொண்டிருந்ததோடு பத்திரிகையாளரும் சமூக செயற்பாட்டாளருமான அருள் கார்க்கி அவர்களும் கலந்து கொண்டிருந்தார்.  இக் கருத்துவட்டத்தில்  பேராதனைப் பல்கலைக்கழகத் தமிழ்ச் சங்கத்தின் உப தலைவர் மு.புவனேஸ்வரன் பத்திரிகையாளர் அருள் கார்க்கி ஆகியோரால் கருத்துக்கள் பகிரப்பட்டதோடு கலாநிதி.எஸ்.பாஸ்கரன் சிறப்புரை வழங்கினார். இதன்போது தொழிலாளர் நலன் சார் விடயங்கள், தொழிலாளர் உரிமைகள், இலங்கை தொழிலாளர்கள் எதிர்நோக்கும பிரச்சினைகள் போன்ற விடயங்களின் கீழ் ஆழமான கருத்துக்கள் பகிரப்பட்டன.

“மகாவலிக் கரையில்...”என்ற இக் கலந்துரையாடலானது ஒவ்வொரு மாதமும் முதல் வாரத்தில் இடம்பெறும் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.